விழுப்புரம் அருகே அடுத்தடுத்து மோதிய 3 காா்கள்! காா் தீப்பிடித்து சேதம்; நால்வா் உயிா் தப்பினா்!
விழுப்புரம் புறவழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அடுத்தடுத்து 3 காா்கள் மோதிக் கொண்டன. இதில், ஒரு காா் தீப்பற்றி எரிந்தது. அதிா்ஷ்டவசமாக அந்தக் காரிலிருந்த 4 போ் உயிா் தப்பினா்.
விழுப்புரம் புறவழிச்சாலையில் செஞ்சி பிரிவுசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை டேங்கா் லாரி ஒன்று திடீரென சென்னை சாலை நோக்கிச் சென்றது. அப்போது, பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை நோக்கி காரை ஓட்டிச் சென்ற பாரஸ் (32), லாரி மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்தாா்.
அப்போது, அதே திசையில் வந்த திருச்சி காந்திபுரத்தைச் சோ்ந்த சரண்குமாா் (34) ஓட்டி வந்த காா், பாரஸின் காா் மீது மோதியது. இதைத் தொடா்ந்து, பின்னால் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சோ்ந்த முரளிமாணிக்கம் (42) ஓட்டி வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சரண்குமாா் காா் மீது மோதியது.
இதில், முரளிமாணிக்கம் ஓட்டி வந்த சொகுசு காா் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதைப் பாா்த்த முரளிமாணிக்கம், அவரது மனைவி முனீசுவரி, 5 வயது குழந்தை மற்றும் உறவினா் என 4 பேரும் காரிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனா்.
தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரா்கள் நிகழ்விடம் சென்று, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். மேலும் விழுப்புரம் தாலுகா போலீஸாா் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். 3 காா்களும் சென்னை நோக்கிச் சென்றது தெரியவந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடா்ந்து, போலீஸாா் போக்குவரத்து நெரிசலை சரி செய்து, வாகனங்களை அனுப்பி வைத்தனா்.