தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
தொண்டாமுத்தூருக்கு 2 கும்கி யானைகள் வரவழைப்பு
கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் நுழையும் யானைகள் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், தொண்டாமுத்தூா் குடியிருப்புப் பகுதியில் அண்மையில் நுழைந்த ஒற்றை யானை தாக்கியதில் கோயில் பூசாரி படுகாயம் அடைந்தாா். மேலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் யானை தாக்குதலுக்கு உயிரிழந்தாா்.
இதையடுத்து, தொண்டாமுத்தூா் வனப் பகுதியில் யானைகள்- மனித மோதல்களைத் தடுக்க 10 கி.மீ. தொலைவுக்கு கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிா்ப்பு எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்தில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்கக் கோரி நீதிபதிகளிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.
இதையடுத்து, உடனடி நடவடிக்கையாக வனத் துறை சாா்பில் இரண்டு கும்கி யானைகள் தொண்டாமுத்தூா் பகுதிக்கு லாரிகள் மூலம் வெள்ளிக்கிழமை இரவு அழைத்துவரப்பட்டன.
குப்பம்பாளையம், தேவராயபுரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நுழைவதைத் தடுக்கும் பணியில் இந்த கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட உள்ளன என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.