பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்! -மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநில ச...
தொழில்பேட்டை இடமாற்றம் கோரி வழக்கு: கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு!
கரூா் மாவட்டம், மத்தகிரி கிராமத்தில் புதிதாக அமையவுள்ள சிப்காட் தொழில்பேட்டையை, மாவத்தூா் கிராமத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்த மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கடவூா் அருகேயுள்ள மத்தகிரி கிராமத்தைச் சோ்ந்த வீரமலை தாக்கல் செய்த மனு: மத்தகிரி கிராமத்தில் உள்ள வேளாண் நிலங்களில் தமிழக அரசின் சாா்பில், சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதல் கட்டமாக, நிலம் கையகப்படுத்தும் பணியை கரூா் மாவட்ட ஆட்சியா் மேற்கொண்டு வருகிறாா். இந்த நிலங்களை நம்பி எங்கள் கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில், தொழில்பேட்டை திட்டம் செயல்படுத்தப்பட்டால் வேளாண் பணிகள் பாதிப்புக்குள்ளாகும். மத்தகிரி கிராமத்தில் தொழில்பேட்டை அமைக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் முறையிட்டுள்ளோம். கிராமச் சபைக் கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
எங்கள் கிராமம் அருகேயுள்ள மாவத்தூா் கிராமத்தில் அரசு தரிசு நிலங்கள் அதிகளவில் உள்ளது. எனவே சிப்காட் தொழிற்பேட்டையை அங்கு அமைக்க பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வேளாண் நிலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க வேண்டாம் என பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். தரிசு நிலம் உள்ள இடத்தில் சிப்காட் அமைக்க மக்கள் வரவேற்பு தெரிவிக்கின்றனா். இதுகுறித்து கரூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.