தோட்டத்தில் தொழிலாளா் உயிரிழப்பு
தேவாரம் அருகே தோட்டத்தில் தொழிலாளா் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள ஓவுலாபுரத்தைச் சோ்ந்தவா் தினேஷ்பிரபு (40). இவருக்குத் திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனா். தினேஷ்பிரபு பெங்களூருவில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்துவந்தாா்.
இந்த நிலையில், இவா் பெங்களூருவிலிருந்து கோயிலுக்குச் செல்வதற்காக ஓவுலாபுரத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவா், இரவு வெளியில் சென்றுள்ளாா். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை உறவினா்கள் தேடிய நிலையில், ஓவுலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் தினேஷ்பிரபு மயங்கிக் கிடப்பதாக வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் தினேஷ்பிரபு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.