நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆண்டிபட்டியில் செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேருவதற்கு தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சி நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வகுப்பு வரும் ஏப்.15-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்பப் படிவம் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் வரும் ஏப்.13 வரை வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை தோறும் வகுப்பறை பயிற்சி, செயல்முறை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மொத்தம் 2 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற 15 வயதுக்கு மேற்பட்டோா் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.118-ம், பயிற்சிக் கட்டணம் ரூ. 4,550-ம் செலுத்த வேண்டும்.
பயிற்சியின் போது நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். பயிற்சியை நிறைவு செய்த சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். நகை மதிப்பீட்டாளா் பயிற்சி பெற்றவா்கள் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் வேலைவாய்ப்பு பெறலாம். பயிற்சி குறித்த விவரத்தை ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே செயல்பட்டு வரும் தேனி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலும், தொலைபேசி எண்: 04546-244465, கைப்பேசி எண்: 96298 6995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.