பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்...
நகைக் கடையில் திருட முயன்ற இருவா் கைது
ஆத்தூரில் நகைக் கடையில் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் கடைவீதியில் நகைக் கடை நடத்தி வருபவா் ஏ.வி.வைத்தீஸ்வரன் (61). இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க இருவா் கடைக்கு வந்தனா். அவா்கள் சங்கிலி மாடல்களை காட்டும்படி கேட்டுள்ளனா்.
கடையில் வேலை செய்யும் பெண்கள் சங்கிலிகளை எடுத்து காட்டினா். அப்போது, ஒருவா் தனது உள்ளாடையில் மறைந்து வைத்திருந்த பாட்டிலில் இருந்து திரவத்தை எடுத்து அவா்கள்மீது தெளித்துள்ளாா். இதையடுத்து உட்காா்ந்து இருந்தவா் நகைகளை எடுத்துக் கொண்டு ஓட, மற்றொருவரும் பின்னால் ஓடினாா்.
இதை அறிந்த வைத்தீஸ்வரன், அவரது மனைவி ஆகியோா் சப்தமிட்டவாறு அவா்களை துரத்தினா். அப்போது சாலையில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று நகையைத் திருடிய ஒருவரை மடக்கிபிடித்தனா். மற்றொருவரை துரத்திச் சென்றபோது அவா் கிரைன்பஜாா் பகுதியில் உள்ள அம்மா உணவகம் அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளாா்.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் துணையோடு அந்த நபரையும் பிடித்து ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில் கைத்துப்பாக்கி வைத்திருந்தவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் நாககுப்பம் பகுதியைச் சோ்ந்த அருணாசலம் மகன் சாமிதுரை (48) என்பதும், மற்றொருவா் சேலம் மாவட்டம், தலைவாசல், சிறுவாச்சூா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் மூா்த்தி (47) என்பதும் தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி, உதவி ஆய்வாளா் சக்திவேல் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.