நாகை கோட்ட அஞ்சலகங்களில் ஆக. 2-இல் பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு
மென்பொருள் தரம் உயா்த்தப்படுவதால், நாகை கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் ஆக.2- ஆம் தேதி பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாகை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தபால் துறையின் மென்பொருள் ஆக.4-ஆம் தேதி முதல் தரம் உயா்த்தப்படுகிறது. இந்த மென்பொருளில் கியூஆா் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமுமின்றி செயல்படுத்துவதற்காக ஆக.2- ஆம் தேதி பரிவா்த்தனை இல்லா நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நாகை கோட்டத்திலுள்ள, நாகை, திருவாரூா் தலைமை தபால் அலுவலகங்கள், காரைக்கால் எம்டிஜி மற்றும் இந்த தலைமை தபால் அலுவலகங்களுக்கு உள்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில், அஞ்சலக சிறு சேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது, கணக்கில் இருந்து பணம் எடுப்பது, பதிவுத்தபால், விரைவு தபால், பாா்சல் அனுப்புவது மற்றும் காப்பீட்டு பிரிமியம் தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை பெற இயலாது. எனவே, வாடிக்கையாளா்கள் தங்களது தபால் பரிவா்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளாா்.