புலம்பெயர் தொழிலாளர்கள்: தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
நாகை, திருவாரூா் மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்
நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தமிழக முதல்வரால் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியியல், மகளிா் மருத்துவம், குழந்தை மருத்துவம், இதயவியல், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையான மருத்துவங்களும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதிய காப்பீடு பதிவு உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகை: நாகை மாவட்டத்தில் கீழையூா் ஊராட்சி ஒன்றியம் காரப்பிடாகை அரசு உயா்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், கீழ்வேளூா் எம்எல்ஏ வி.பி. நாகைமாலி ஆகியோா் முதல்வரின் வரிவான மருத்துவ காப்பீடு அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினா்.
வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவா் டாயானா ஷாமிளா, பேரூராட்சி துணைத் தலைவா் தாமஸ் ஆல்வா எடிசன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் விஜயகுமாா், இணை இயக்குநா் (நலப் பணிகள்) உமா, துணை இயக்குநா் (காசநோய்) முருகப்பன், துணை இயக்குநா் (குடும்பநலம்) செல்வி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.