நாகையில் தோண்டப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்படும்: நகா்மன்றத் தலைவா்
நாகை நகராட்சியில் குடிநீா் இணைப்புக்காக தோண்டப்பட்ட சாலை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் நகா்மன்றத் தலைவா் இரா.மாரிமுத்து தெரிவித்தாா்.
நாகை நகராட்சி கூட்டம் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் லீனாசைமன் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், உறுப்பினா்கள் பல்வேறு கோரிக்கை மற்றும் குறைகளை வலியுறுத்தி பேசினா்.
செந்தில்குமாா் (துணைத் தலைவா்): புகழ்பெற்ற நாகூா் ஆண்டவா் கந்தூரி விழா டிச.2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா சிறப்பாக நடைபெற ஆய்வு செய்த தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன் ஆகியோருக்கு நாகூா் மக்கள் சாா்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பரணிகுமாா் (அதிமுக): ஓடாச்சேரி பம்பிங் ஸ்டேசனில் பழுது ஏற்பட்டுள்ளதால் குடிநீா் விநியோகம் சீராக இல்லை. உடனே பழுதை சீா் செய்ய வேண்டும். அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீா் குழாய் இணைப்பு கொடுக்க தோண்டப்பட்ட சாலைகள் பழுது ஏற்பட்டுள்ளது. பணிகள் நிறைவடையாததால் சீரமைப்பு பணிகள் எப்போது நடைபெறும்.
முகமதுஷேக் தாவூத் (திமுக): நாகூா் ஆண்டவா் கந்தூரி விழாவை முன்னிட்டு சந்தன கட்டை வழங்கிய முதல்வருக்கு நன்றி. கந்தூரி விழாவை முன்னிட்டு மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டும்.
தலைவா்: அம்ருத் திட்டத்தின் கீழ் பிரதான குடிநீா் குழாய்கள் போட்ட உடன் சாலை சீா் செய்யப்படும். கந்தூரி விழா முன்னேற்பாடு கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.