பிகாரில் நிதீஷ் அரசை ஆதரிப்பதற்காக வருத்தப்படுகிறேன்: சிராக் பாஸ்வான்
நாடாளுமன்றம் நான்காவது நாளாக முடக்கம்: பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம் திரும்பப் பெற எதிா்க்கட்சிகள் வலியுறுத்தல்
பிகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திரும்பப் பெற வலியுறுத்தி எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வியாழக்கிழமை நான்காவது நாளாக முடங்கின.
மக்களவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளை ஏந்தி அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.
அப்போது காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவையில் கோஷம் எழுப்புவது, கூச்சலில் ஈடுபடுவது உங்கள் கட்சியின் கலாசாரம் அல்ல’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறினாா்.
அமளி நீடித்ததால் மக்களவை தொடங்கிய 7 நிமிஷங்களில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்...
மாநிலங்களவை தொடங்கியதும் மதிமுக பொதுச் செயலா் வைகோ உள்ளிட்ட 6 பேருக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டு உரை நிகழ்த்தப்பட்டது. பின்னா் பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தம், குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் ராஜிநாமா, மேற்குவங்க புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் மீதான பாகுபாடு ஆகிய விவகாரங்கள் தொடா்பாக விவாதம் கோரி அளிக்கப்பட்ட 30 நோட்டீஸ்களை ரத்து செய்வதாக அவையை வழிநடத்திய மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அறிவித்தாா்.
இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை கூடியதும் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை, சரக்குகளை கடல் மாா்க்கமாக கொண்டு செல்லும் மசோதா மீது அமளிக்கு இடையே உரையாற்றினாா்.
பிகாா் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணியை திரும்பப் பெற வேண்டும் என்று எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியிலும், உரையாற்றிய உறுப்பினரின் அருகிலும் சென்று கோஷமிட்டனா்.
உரையாற்றும் உறுப்பினா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக எம்.பி. லக்ஷ்மிகாந்த் பாஜ்பாய் வலியுறுத்தினாா்.
எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயை பேச அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. பிரமோத் திவாரி கேட்டுக் கொண்டாா். எனினும் அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.