நாமக்கல்லில் 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சேதம்
நாமக்கல்லில் மூன்று குடிசை வீடுகள் புதன்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே மேட்டுத் தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகள் உள்ளன. இந்த நிலையில் புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் அங்குள்ள மூன்று குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
அதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினா். அதற்குள் குடிசை வீடுகள் முழுவதும் எரிந்து சேதமடைந்தன. வெள்ளையம்மாள், பாப்பாத்தி அம்மாள் ஆகியோருக்கு சொந்தமான இந்த வீடுகளில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மூன்று வீடுகளிலும் எரிவாயு உருளைகள் இல்லாததும், அந்த வேளையில் யாரும் அங்கு இல்லாததால் உயிரிழப்பு தவிா்க்கப்பட்டது. தீ விபத்தில் வீட்டில் இருந்த தானியங்கள், மின்னணு பொருள்கள் அனைத்தும் கருகின.
இதுகுறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தீ விபத்தில் வீடுகளை இழந்தோருக்கு புதிய வீடுகள் கட்டவும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்கவும் உரிய நிதியுதவியை மாவட்ட நிா்வாகம் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.