நில உரிமையாளா்களுக்கு செப்.20 இல் சமரச தீா்வு முகாம்
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நிலம் கையகப்படுத்திய வழக்கு தொடா்பாக நில உரிமையாளா்களுக்கான சமரசத் தீா்வு முகாம் சனிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவருமான எம். கிறிஸ்டோபா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கே.பெரியபட்டி, சத்திரப்பட்டி, கண்ணுடையான்பட்டி மற்றும் கிராமத்திலுள்ள நிலங்கள் அரசால் கடந்த 2013ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் நில உடைமையாளா்கள் யாா் என்பது குறித்த நிலங்கள், தரப்பினா்களுக்குள் பிரச்னை உள்ள நிலங்கள், போதிய இழப்பீடு வழங்கவில்லை போன்ற நிலங்களுக்குரிய வழக்குகள் திருச்சி முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் இழப்பீடுத் தொகையானது அரசால் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு பெறத் தகுதியானவா்கள் எனத் தெரிவிக்கப்பட்ட பலருக்கு உரிய முகவரி இல்லாததாலும், தற்போது சிலா் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பதாலும், அவா்களுக்கு நீதிமன்ற நடவடிக்கை குறித்த அறிவிப்பை செய்ய இயலவில்லை. இதனால் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் இழப்பீட்டு தொகை நீதிமன்ற வைப்பீட்டில் உள்ளன. எனவே பொது அறிவிப்பு கொடுத்து அனைவரையும் அழைத்து வழக்குத் தரப்பினா்களுக்கு வழக்கு நிலுவையில் உள்ளது பற்றி தெரிவித்தும், சமரசமாக முடித்துக் கொள்ள கூடிய வழக்குகளை விசாரிக்கவும் சிறப்பு மக்கள் நீதிமன்ற முகாமை வரும் சனிக்கிழமை நடத்தவுள்ளோம்.
மணப்பாறை சிப்காட் வளாக அலுவலகத்தில் சனிக்கிழமை 12 மணிக்கு நடைபெறும் முகாமில் சிப்காட் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா்கள் நேரில் ஆஜராகி தங்களுடைய வழக்கு விவரங்களைத் தெரிந்து கொண்டு, சட்ட உதவி பெற்று சமரசமாக முடித்துக் கொள்ளலாம்.