நீட் தேர்வு நிறைவு: இயற்பியல் கடினம்; உயிரியல் சற்று எளிமை!
நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது.
இதில், இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், உயிரியல் கேள்விகள் சற்று எளிமையாக இருந்ததாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இயற்பியல் பகுதியில் கணக்கீடு செய்து பதில் அளிக்கும் கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாகவும், இதனால் அதிக நேரம் தேவைப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத் தேர்வு நேரத்தில் ஒன்றரை மணிநேரம் இயற்பியல் கேள்விகளுக்கே சென்றுவிட்டதாகவும் கூறுகின்றனர்.
இதேபோன்று உயிரியல் பகுதியில் கேள்விகள் நீளமாக இருந்ததால், புரிந்துகொண்டு பதில் அளிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொண்டதாக சில மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும், வேதியியலை ஒப்பிடும்போது உயிரியல் கேள்விகள் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.