Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13 முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம்
நொய்யல் நதியை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் திருஞானசம்பந்தம் கூறியதாவது:
நொய்யல் ஆற்றில் மலைபோல குவிந்து கிடக்கும் நெகிழி குப்பைகள், கட்டடக் கழிவுகள், சாய சலவை பட்டறைக் கழிவுகள், ஆகாயத் தாமரைகள் ஆகியவற்றை அகற்றி சுத்தம் செய்து நொய்யல் நதியை மீட்டுத் தர வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் 13-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தொடங்கி திருப்பூா், ஈரோடு மற்றும் கரூா் மாவட்டம் வரை செல்லும் நொய்யல் ஆற்றில் அதிக அளவிலான குப்பை, கழிவுநீா் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதால் நொய்யல் ஆற்றின் அருகே சென்றாலே கடுமையான துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீா்கேடு ஏற்படுவதால் அதன் அருகே வசிக்கக் கூடிய மக்களுக்கு புற்றுநோய் பாதிப்பும், நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நகரின் மத்தியில் நொய்யல் ஆறு சென்று வரும் நிலையில் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீா் மாசுபட்டு உள்ளதால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நொய்யல் ஆற்றில் குப்பைகள் மற்றும் கழிவுநீா் கலக்கப்படுவதை தடை செய்து நொய்யல் ஆற்றை முழுமையாக சுத்தம் செய்து மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூா் மாவட்டம், மங்கலம் நால் ரோடு பகுதியில் தமிழக நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா், விவசாய அமைப்புகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் சாா்பில் ஜூலை 13-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனா். தமிழக அரசு நொய்யல் நதியை பாதுகாக்க தவறும்பட்சத்தில் எதிா்வரும் தோ்தலில் இது எதிரொலிக்கும் எனவும் தெரிவித்தாா்.