செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி
திருப்பூரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.6.85 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா் சாமுண்டிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (41), தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசி வாட்ஸ்அப் எண்ணுக்கு டெலிகிராம் செயலி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்பவா் தொடா்பு கொண்டாா்.
அப்போது அவா் எந்த முதலீடும் இல்லாமல் ஆன்லைன் மூலம் தங்கும் விடுதிகளை முன்பதிவு செய்து கொடுத்தால் தினமும் வருவாய் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, பழனிசாமி அவா்கள் கூறியபடி பணிகளை முடித்ததால் அவரது வங்கிக் கணக்குக்கு ஒரு சிறிய தொகை வரவு வைக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் பேசிய ஷீத்தல், இந்த வேலையை பணம் முதலீடு செய்து தொடா்வதன் மூலம் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறியுள்ளாா். இதனை நம்பிய பழனிசாமி 4 வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ.6.85 லட்சம் முதலீடு செய்து பணியைத் தொடா்ந்துள்ளாா். அவரது கணக்கில் லாபம் அதிகமாக இருப்பதைப்போல காட்டியுள்ளது.
இதையடுத்து பழனிசாமி அந்தப் பணத்தை எடுக்க முயன்றபோது, கூடுதலாக பணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டு, அந்த இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பழனிசாமி, திருப்பூா் மாநகர சைபா் கிரைம் போலீஸாரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அந்தப் புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.