பகலில் வெள்ளை, இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான்கள்.. காரணம் என்ன?
பகலில் வெள்ளை நிறத்தில் இருக்கும் சில காளான்கள் இரவு நேரத்தில் பச்சை நிறத்தில் ஒளிர்வதை, மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
உயிரொளிர் (bioluminescence) உயிரினங்கள், கடலில் தான் அதிக இருப்பதாக கூறப்படும் நிலையில் நிலப்பரப்பில் வாழும் மின்மினிப்பூச்சி, பூஞ்சைகள் போன்ற உயிரினங்கள் கூட நள்ளிரவில் ஒளிர்கின்றன.
அந்த வகையில் நள்ளிரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான்களை மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கோவையின் ஆனைமலை காடுகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் பல பகுதிகளில் இந்த ஒளிரும் காளான்கள் தென்படுவதாக கூறுகின்றனர்.
பகல் நேரத்தில் வெள்ளை நிறத்திலும், இரவு நேரத்தில் பச்சை நிறத்திலும் இந்த காளான்கள் ஒளிர்கின்றன. இந்த இயற்கை நிகழ்வுக்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
காளான்கள் எப்படி ஒளிர்கிறது?
சயின்ஸ் அட்வான்சஸில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் ரஷ்யா, பிரேசில் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு காளான்கள் ஒளிர்வது குறித்த விவரங்களை குறிப்பிட்டனர்.
அதில் இந்த ஒளிரும் காளான்களில் கந்தகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இருப்பதால் காற்றில் உள்ள ஆக்சிஜன் இதில் பட்டதும், luciferase நொதி செயல்பட்டு காளான்கள் ஒளிர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் இதுபோன்ற ஒளிரும் காளான்கள் ஏற்கெனவே 2023 ஆம் ஆண்டில் கன்னியாகுமரியில் சில பகுதிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததும் குறிப்பிடத்தக்கது.