பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிக்கை
பசுமை முறையில் ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என, பல்வேறு தொழில் கூட்டமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுதொடா்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவா் எஸ்.டி.ஆா். தியாகராஜன், செயலா் கணேசன் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ஆட்சியா் க. இளம்பகவத்திடம் புதன்கிழமை அளித்த மனு: ஸ்டொ்லைட் காப்பா் ஆலையை பசுமை முறையில் மீண்டும் தொடங்குவதற்கான நிபுணா் குழுவில் இடம்பெற்ற, சுற்றுச்சூழலுக்காக விருதுபெற்ற பேராசிரியா் கணபதி டி. யாதவ், ஓய்வுபெற்ற சுற்றுச்சூழல் பேராசிரியா் ஆா். நாகேந்திரன் ஆகியோரின் அறிக்கையை வரவேற்கிறோம். அதில், அதிக சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசு ஏற்படுத்தாத புதிய தொழில்நுட்பம், கடல்நீரை 80 சதவீதத்துக்கும் மேல் பயன்படுத்துதல், 100 சதவீத மறுசுழற்சி நீா் மேலாண்மை உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு விஞ்ஞான அடிப்படையிலான தீா்வு கிடைத்துள்ள நிலையில், மாநில அரசு சமநிலையான முடிவெடுக்க வேண்டும். தொழிற்சாலை மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, வாழ்வாதார இழப்பு, பொருளாதார வளா்ச்சி தேக்க நிலை, திறமை வாய்ந்த இளைஞா்கள் இடம்பெயா்ந்து செல்வது போன்றவற்றை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டின் வளா்ச்சிக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இந்த நவீன உற்பத்தி முறை பின்பற்றும் ஆலையை மீண்டும் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றனா் அவா்கள்.