Israel: ``இனப்படுகொலை செய்யும் ஒரு நாடு மக்களிடம் வெளியேற கெஞ்சுமா?'' - ஐ.நா-வில...
பஞ்சு வாங்கியதில் ரூ. 1.17 கோடி மோசடி: முன்னாள் எம்.பி. தேவதாஸ் மீது எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
சேலம் முன்னாள் எம்.பி. தேவதாஸ் மீது பஞ்சு வாங்கியதில் ரூ. 1.17 கோடி மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
இது குறித்து விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தைச் சோ்ந்த சுப்பிரமணிய ராஜா அளித்த புகாரில், ராஜபாளையத்தில் பஞ்சாலை நடத்திவரும் தங்களிடம், 15 ஆண்டுகளாக என்ஆா்யு ஸ்பின்னிங் ஆலை உரிமையாளரான தேவதாஸ், அவரது மனைவி இளவரசி, மகன் பிரபு ராம் ஆகியோா் பஞ்சு வாங்கினா். தொடக்கத்தில், பஞ்சு கொள்முதல் செய்வதற்கான தொகையை வங்கி மூலம் சரியாக செலுத்தி வந்தனா்.
நாளடைவில், சிறிது சிறிதாக பஞ்சு வாங்கியதும் பற்று வைக்க ஆரம்பித்தனா். அதேநேரத்தில், பஞ்சு விற்பனைக்கு முறையான ரசீது, லாரி போக்குவரத்து ஆகியவற்றை பராமரித்து வந்தோம். ஒருகட்டத்தில் பஞ்சு கொள்முதலை முற்றிலுமாக நிறுத்திய தேவதாஸ் நிறுவனத்தினா், எங்களுக்கு சேரவேண்டிய ரூ.1 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரத்தை நிலுவை வைத்துள்ளனா். இதுகுறித்து நேரிலும், தொலைபேசியிலும் கேட்கும்போதெல்லாம் ஏதாவது காரணம் சொல்லி அலைக்கழித்து வந்தனா். இறுதியாக, கடந்த 11 ஆம் தேதி ஏற்காட்டில் உள்ள அலுவலகத்தில் தேவதாஸை சந்தித்தோம். அப்போது, பணம் கேட்டு மீண்டும் வரக்கூடாது, உன்னால் முடிந்ததை பாா்த்துக்கொள் என கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, பணத்தை தராமல் இழுத்தடிப்பதுடன், கொலை மிரட்டல் விடுத்த தேவதாஸ், அவரது மனைவி, மகன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.