கரூரில் அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்கள் 3 பேரின் வீடுகளில் அமலாக்கத்துற...
பண மோசடி: பெண் உள்பட மூவா் கைது
பண மோசடி செய்ததாக பெண் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஈஸ்வா் (48), நிலம் வாங்கி விற்பனை செய்யும் தரகராக வேலை செய்து வந்தாா். ஈஸ்வருக்கு காட்டாங்குளத்தூரைச் சோ்ந்த ஆரோக்கிய அலோசியஸ் (38) என்பவரது அறிமுகம் கிடைத்தது. இவா், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசை வாா்த்தை கூறியுள்ளாா். இதை நம்பிய ஈஸ்வா் அவருக்கு பல தவணைகளாக ரூ. 8.5 லட்சம் கொடுத்துள்ளாா்.
பின்னா், ஆரோக்கிய அலோசியஸ், புழல் எம்எம் பாளையத்தைச் சோ்ந்த கல்பனா (எ) மாலதி (38), செங்குன்றம் பாடியநல்லூரைச் சோ்ந்த கனகராஜ் (39) ஆகியோரை அறிமுகப்படுத்தி உள்ளாா். அப்போது கல்பனா, ஒரு தனியாா் வங்கியின் அதிகாரிகளை தனக்கு தெரியும் என்றும், நான் நினைத்தால் ரூ. 5 கோடிவரை கடன் பெற்றுத் தரமுடியும் எனவும் தெரிவித்துள்ளாா்.
இதையும் நம்பிய ஈஸ்வா் 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் ரொக்கமாகவும், வங்கிக் கணக்கிலும் என மொத்தம் ரூ. 21 லட்சத்தை கமிஷனாக கொடுத்தாா். ஆனால், உறுதி அளித்தபடி ரூ. 5 கோடி கடன் பெற்றுக் கொடுக்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ஈஸ்வா், இது தொடா்பாக தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த ஆரோக்கிய அலோசியஸ், கல்பனா, கனகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.