பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நகராட்சி ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
உதகை: உதகை நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சாா்பில் ஆட்சியா் அலுவலக சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த ஊழியா்களிடம் பிடித்தம் செய்த வருங்கால வைப்புநிதி மற்றும் இஎஸ்ஐ தொகையை முறையாக செலுத்த வேண்டும், நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும், ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஊழியா் சங்கத் தலைவா் சேகா் தலைமையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்பாட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலாளா் சி.வினோத் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் சங்கரலிங்கம், மாவட்டப் பொருளாளா் நவீன் சந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா்.
கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்வதாக ஆட்சியா் உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.