பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் தீ விபத்து
திருப்பூரில் பனியன் நிறுவனம் உள்ளிட்ட 2 இடங்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூா், வீரபாண்டியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (39). இவா், கல்லாங்காடு பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறாா். நிறுவனத்தில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை தொழிலாளா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது, நிறுவனத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து பனியன் துணிகள் மற்றும் ஆடைகளில் தீப்பரவியது.
தகவலின்பேரில் திருப்பூா் தெற்கு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமாா் 2 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனா்.
இதில், தையல் இயந்திரங்கள், துணிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: திருப்பூா், குமரானந்தபுரத்தை அடுத்த கோட்டை மாரியம்மன் கோயில் 4-ஆவது வீதியைச் சோ்ந்தவா் ராஜா (50). இவா், கிழக்கு நல்லாத்துப்பாளையம் அருகேயுள்ள முருகன் நகரில் பழைய அட்டை மற்றும் பேப்பா் விற்பனை செய்யும் கிடங்கு நடத்தி வருகிறாா். இந்தக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென தீப்பிடித்தது. இதையறிந்த தொழிலாளா்கள் உடனடியாக வெளியேறினா்.
திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்த விபத்தில் அட்டைகள் மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது குறித்து அனுப்பா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.