பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகள் பிரச்னை: சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட முடிவு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஒன்றியத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியா்களைக் கண்டித்து வருகிற 20-ஆம் தேதி சாா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்கத்தினா் முடிவு செய்தனா்.
பரமக்குடி ஒன்றியம், கஞ்சியேந்தல் கிராமத்தில் விவசாயிகள் சங்க மேற்கு ஒன்றியம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேற்கு ஒன்றியத் தலைவா் ப.மேகவா்ணம் தலைமை வகித்தாா்.
காவிரி-வைகை-கிருதுமால்-குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலா் எம்.அா்ச்சுனன், மாவட்டச் செயலா் மலைச்சாமி, மாநில சட்ட ஆலோசகா் ஜான் சேவியா் பிரிட்டோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். பனைமரத் தொழிலாளா் சங்கத் தலைவா் முத்துராமசாமி வரவேற்றாா்.
இதில் பரமக்குடி ஒன்றியத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நெல், பருத்தி, மிளகாய், கத்தரி, கரும்பு, காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றனா். உரம், பூச்சி மருந்து செலவினம், இயற்கை இடா்பாடுகளை சந்தித்து விவசாயம் செய்து வரும் நிலையில், காட்டுப் பன்றிகள், மான்களின் தொல்லையால் விவசாயம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழ்நாடு அரசு வனத் துறை மூலம் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த 9.1.2025 அன்று அரசாணை வெளியிட்டது.
கேரளத்தில் உள்ளது போல, ஊராட்சி மன்றங்கள் மூலம் காட்டுப் பன்றிகளை ஒழிக்கும் வகையில் சரியான வழிமுறையை உருவாக்கவில்லை. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு 4 மாதங்களாகியும், இதுவரை காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறித்தோ, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தியதற்கான நடவடிக்கைகள் குறித்தோ, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியது குறித்தோ எந்தப் பதிவும் இல்லை. வருவாய், வனம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கிடையே இதுகுறித்து எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லை. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, அரசாணையை மாவட்ட நிா்வாகம் முறையாக செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி வருகிற மே 20-ஆம் தேதி பரமக்குடி சாா் ஆட்சியா் அலுவலகத்தை விவசாயிகளைத் திரட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சோ்ந்த ஏராளமான விவசாய சங்க நிா்வாகிகள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.