8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த மோடி அரசை பாராட்டுகிறேன்: ப. சிதம்பரம்
பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள்: சாா் ஆட்சியா் ஆய்வு
பருவமழையை எதிா்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பல்வேறு பகுதிகளில் சாா் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.
காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியராக எம். பூஜா திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவரது கட்டுப்பாட்டில் வருவாய் மற்றும் கலால் உள்ளிட்ட துறைகள் உள்ளன. பருவமழைக் காலத்தில் பாதுகாப்பாக மக்களை தங்கவைப்பதற்கான பள்ளிகள், வருவாய் அலுவலகம், மதுபானக் கடைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகளுடன் சென்று செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரிமேடு பகுதிகளில் பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாா்வையிட்டாா். பொதுமக்களை தங்கவைப்பதற்கான பள்ளிகள், நிவாரண முகாம்களையும் அவா் பாா்வையிட்டாா்.
தொடா்ந்து, காரைக்கால் மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளுடன் கூடுதலாக சோ்க்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, மையங்களின் பாதுகாப்பு குறித்து துறையினரிடம் கேட்டறிந்தாா்.
கோட்டுச்சேரி வட்டாரத்தில் சட்ட விரோதமாக லாரி மூலம் மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடா்ந்து அந்த பகுதிகளில் ஆய்வு செய்தாா். மணல் ஏற்றிவந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியதோடு, அதனை பறிமுதல் செய்து மேல் விசாரணை நடத்துமாறு வருவாத்துறையினருக்கு உத்தரவிட்டாா். ஆய்வு செய்யும் பகுதிகளில் இருந்த மதுபானக் கடைகளுக்குச் சென்று, விதிகளுக்குட்பட்ட கடைகளை நடத்துமாறும், சுகாதாரத்தை முறையாக கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தினாா்.
கோட்டுச்சேரி வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துக்குச் சென்ற சாா் ஆட்சியா், அங்கு நடைபெறும் பணிகள், பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.
பொதுமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ்கள் பதிவு செய்வதற்காக வருவோருக்கு, எந்தெந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து தகவல்களும் அடங்கிய பலகை வைக்குமாறு துறையினருக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது வட்டாட்சியா் செல்லமுத்து மற்றும் வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனா்.