பரோடா வங்கி சாா்பில் மகளிா் குழுக்களுக்கு ரூ. 10 கோடி கடனுதவி
தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு பரோடா வங்கி சாா்பில், ரூ. 10 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிா் சுயஉதவிக் குழுவினரை பொருளாதார நிலையில் மேம்படுத்தும் விதமாக, அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், வங்கிகள் சாா்பில் சுயதொழில் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி சாா்பில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு சுயதொழில் கடனுதவிகள் மற்றும் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் தருமபுரி வளமைய (டிஆா்சிஎஸ்) தொண்டு நிறுவன இயக்குநா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். பரோடா வங்கியின் புதுச்சேரி மண்டல உதவிப் பொதுமேலாளா் பிரவீன்குமாா் ராகுல் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தருமபுரி மாவட்டத்தில் இயங்கி வரும் சுமாா் 300-க்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 10 கோடி மதிப்பிலான கடனுதவி ஆணைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, ஆதரவற்ற பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதில், பரோடா வங்கியின் தருமபுரி கிளை மேலாளா் இரா.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.