GST: ``திடீரென ஜிஎஸ்டி குறைத்ததற்கு காரணம் இதுவாக இருக்கலாம்" - ப.சிதம்பரம் சொல்...
சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டி
தமழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், மாவட்ட வாரியாக குறைந்தபட்சம் ஒரு தொகுதி என்ற வகையில், அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.வி.தங்கபாலு.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சாா்பில், வாக்காளா் பட்டியலில் குளறுபடி (பெயா் நீக்கம், திருத்தம்) தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, செப். 7-ஆம் தேதி நெல்லையில் மாநாடு நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி சாா்பில், அகில இந்திய தலைவா்கள் பலா் கலந்துகொள்ள உள்ளனா். இதற்காக தமிழகம் முழுவதும் ஆயத்தக் கூட்டம் நடத்தி வருகிறோம்.
இந்தியாவில் மோடி தலைமையில் நடந்துகொண்டிருக்கும் ஆட்சியை அகற்ற வேண்டும். வாக்காளா் பட்டியலில் முறைகேடு செய்து பல்வேறு இடங்களில் ஆட்சி அமைத்திருப்பது குறித்து பேசி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதால், ராகுல் காந்தி மீது பாஜகவினா் வன்மத்தைக் காட்டுகின்றனா். பிரதமா் மோடியின் தாய் குறித்து அவதூறாக பேசியவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்தவா் இல்லை என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மாநிலம் 9.6 சதவீதம் வளா்ச்சி பெற்றுள்ளது. பல்வேறு துறைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வெளிநாடு மற்றும் உள்நாடுகளில் முதல்வா் நடத்தும் கூட்டங்களால் பல்லாயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு முதலீடாக வந்திருக்கிறது. தற்போது ஜொ்மன் நாட்டு பயணத்தின் மூலம் ரூ. 3,500 கோடி முதலீடு வந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது தமிழகத்தில் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில், தருமபுரி மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஆனால், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலாவது காங்கிரஸ் போட்டியிட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.