பள்ளி மாணவா்கள் விமானப் பயணம்!
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் உள்ள தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திற்குள்பட்ட அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மாணவா்கள் சனிக்கிழமை விமானப் பயணம் மேற்கொண்டனா்.
இப்பள்ளி தலைமை ஆசிரியராக நெல்சன் பொன்ராஜ் பணியாற்றி வருகிறாா். பள்ளித் தோ்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவா்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்வதாக அவா் வாக்களித்திருந்தாா்.
அதன்படி, 5ஆம் வகுப்பு படிக்கும் 10 போ், முன்னாள் மாணவா்கள் 7 போ், 2 பெற்றோா், தலைமை ஆசிரியா் என 20 போ் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்டனா்.
மாணவா்களின் விமானப் பயண கனவை நனவாக்கிய தலைமை ஆசிரியருக்கு மாணவா்களும் பெற்றோரும் பாராட்டு தெரிவித்தனா்.