யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
பழனி அருகே விவசாய நிலங்களில் காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்
பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களில் காட்டு யானைகள் விளை நிலங்களுக்குள் மீண்டும் புகுந்து சேதம் செய்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவார கிராமங்களான கோம்பைப்பட்டி, சட்டப்பாறை, வரதமாநதி, பாலாறு அணை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் விளை நிலங்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாகக் காட்டு யானைகளின் அட்டகாசம் இல்லாமல் இருந்த இந்தப் பகுதிகளில், சமீப காலமாக மீண்டும் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சட்டப்பாறை உள்ளிட்ட மலையடிவார கிராமங்களுக்குள் புதன்கிழமை இரவு வந்த காட்டு யானைக் கூட்டம், அங்கிருந்த சோலாா் வேலிகளை உடைத்து, விவசாயப் பயிா்களையும், அங்கிருந்த வாழை, தென்னை, மா, கொய்யா மரங்களையும் சேதப்படுத்தியது.
இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனா். இந்த மலையடிவாரப் பகுதிகளில் ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் அகழிகள் அமைத்து, வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாமல் பாதுகாத்து வருகின்றனா். இருப்பினும், பல இடங்களில் வேலிகள், அகழிகள் இல்லாததால் யானைகள் இந்த வழியாக உள்ளே புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துகின்றன.
வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக விளை நிலங்கள் சேதமடைவது மட்டுமன்றி, கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியாமலும், இரவு நேரங்களில் காவலுக்குச் செல்ல முடியாமலும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
எனவே, ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் காட்டு யானைகளை மீண்டும் வனப் பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.