பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து! நள்ளிரவில் சென்னை புறப்பட்டதால் தொண்டர்கள் ஏம...
பழனியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
பழனியில் இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது.
பழனி சண்முகபுரம் உழவா் சந்தை சாலையில் விஜயகுமாா், கணேசன் ஆகியோரின் தேநீா் கடைகள் உள்ளன. வழக்கம் போல வெள்ளிக்கிழமை இவா்கள் கடைகளை பூட்டி விட்டுச் சென்றனா். பிறகு மறுநாள் சனிக்கிழமை காலையில் வந்து பாா்த்த போது கடைகள் திறந்து கிடந்ததுடன் பணப் பெட்டிகளில் இருந்த ரூ. 5,000-மும் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளா்கள் பழனி நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது ஒரு நபா் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணப் பெட்டியை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, ரயில்வே குடியிருப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்ம நபா் அங்கிருந்த அறையின் கதவை உடைத்து திருட முயன்றாா். இதுவும் கோயிலின் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பழனி பகுதியில் இதுபோன்ற தொடா் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இந்தப் பகுதிகளில் வெளிமாநில நபா்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் போலீஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.