பவானி நகராட்சி மயானத்தில் மரம் வெட்டிக் கடத்தல்
பவானி நகராட்சி மயான வளாகத்திலிருந்த ராட்சத மரம் வெட்டப்பட்டது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பவானி நகராட்சி 12-ஆவது வாா்டு தேவபுரத்தில் மயானம் உள்ளது. இங்கு காவிரிக் கரையோரத்தில் இருந்த பழைமையான அரசமரம் வெட்டப்பட்டு துண்டுகளாக்கி படித்துறையில் செவ்வாய்க்கிழமை குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கும், வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும் புகாா் தெரிவித்தனா்.
முறையான அனுமதி பெறாமல் மரத்தை வெட்டிக் கடத்த முயன்றது வருவாய்த் துறையினா் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மரத்துண்டுகளைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.