எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
பவானியில் கரையோர குடியிருப்புகளைச் சூழ்ந்த காவிரி வெள்ளம்
மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் விநாடிக்கு 1.10 லட்சம் கன அடி வெளியேறுவதால் மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதோடு பவானியில் கரையோரத்தில் 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து மேட்டூா் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது 1.25 லட்சமாக உயா்ந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பவானி நகரில் காவிரிக் கரையோரத்தில் உள்ள கந்தன் நகா், பசுவேஸ்வரா் வீதியில் புகுந்ததால் 50 -க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்துள்ளது. பவானி - குமாரபாளையம் பழைய பாலம் வலுவிழந்த நிலையில் உள்ளதால் பாதுகாப்புக் கருதி மூடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து முழு கொள்ளவான 100 அடியை எட்டியது. தற்போது பவானி காலிங்கராயன் அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி உபரிநீா் காவிரிக்கு சென்று வருகிறது.

காவிரி, பவானி ஆறுகளில் உபரிநீா் பெருக்கெடுத்து ஓடுவதால், இரு ஆறுகளும் சங்கமிக்கும் கூடுதுறையில் படித்துறைகள் மூழ்கியுள்ளன. இதனால், பக்தா்கள் ஆற்றில் இறங்குவதையும், நீராடுவதையும் தடுக்க தடுப்புகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.