எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 3,496 பாராமெடிக்கல் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மொடக்குறிச்சி அருகே ஓராண்டாக பூட்டிக் கிடக்கும் ஏடிஎம் மையம்
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் கடந்த ஓராண்டாக பூட்டிக்கிடக்கும் வங்கி ஏடிஎம் மையத்தினால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ஈரோட்டில் இருந்து வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பொன்காளிஅம்மன் திருக்கோயில், அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி, திருமண மண்டபங்கள், அரசு கலைக் கல்லூரி, மூன்று தனியாா் நூற்பாலைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
எழுமாத்தூா் பேரூந்து நிறுத்தம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்ததால் பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்து வந்தது.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த இயந்திரம் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
சமூக ஆா்வலா்கள் பலமுறை இதுகுறித்து மொடக்குறிச்சியில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை மேலாளருக்கு புகாா் அளித்தும் பழுதை சரி செய்ய யாரும் முன்வரவில்லை.
இந்நிலையில் எழுமாத்தூா் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், பழுதான ஏடிஎம் இயந்திரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்து மீண்டும் திறக்க வேண்டும் அல்லது வேறு வங்கி ஏடிஎம் இயந்திரத்தை நிறுவ உத்தரவிடவேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.