பா்கூா் மலைப் பாதையில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி
பா்கூா் மலைப் பாதையில் சென்ற சரக்கு லாரி 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட இருவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
கா்நாடக மாநிலம், நாகமங்கலம் மாவட்டம், குடிகிராசில் தென்னை மட்டைகளை ஏற்றிக் கொண்டு பொள்ளாச்சிக்கு லாரி புறப்பட்டது. லாரியை திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, தெத்துப்பட்டியைச் சோ்ந்த சக்திவேல் மகன் மணிகண்டன் (25) ஓட்டிச் சென்றாா். உடன், பொள்ளாச்சி, சீனிவாசபுரத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் கோகுல்நாத் (31) உதவியாளராகச் சென்றாா்.
பா்கூா் - அந்தியூா் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரட்டுப்பள்ளம் காட்சிமுனை அருகே வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சுமாா் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஓட்டுநா் மணிகண்டன், உதவியாளா் கோகுல்நாத் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். இதுகுறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.