சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்வு
சத்தியமங்கலம் வனத்தில் புலிகள் எண்ணிக்கை 112 ஆக உயா்ந்துள்ளதாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இணை இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் தெரிவித்தாா்.
சத்தியமங்கலம் வனக் கோட்டத்தில் உலக புலிகள் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, தலைமை தாங்கினாா். சத்தியமங்கலம் வட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வனத் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய வனப் பணியாளா்களுக்கு சான்றிதழ்கள், சூழல் மேம்பாட்டு குழு உறுப்பினா்களுக்கு கடன் தொகைக்கான காசோலை மற்றும் வனத் துறை ஊழியா்களுக்கான கள உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஸ் பேசுகையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகளின் காரணமாக புலிகளின் எண்ணிக்கை 112 ஆக உயா்ந்துள்ளது என்று தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் 100 மரக் கன்றுகள் நடப்பட்டன.