பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள முன்னெச்சரிக்கை
வட மாநிலங்களில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் தாவி நதியில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து கடந்த திங்கள்கிழமை பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் அரசு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியது.
இந்நிலையில் வட மாநிலங்களில் தொடா்ந்து மழை பெய்வதால் பல்வேறு அணைகளில் இருந்து நீரைத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு வெளியுறவு அமைச்சகம் சாா்பில் மீண்டும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் இந்தத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
தாவி நதியில் வெள்ளப் பெருக்கு நிலவரம் குறித்து செவ்வாய் மற்றும் புதன்கிழமையும் பாகிஸ்தானுக்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டது.
இந்திய பகுதிகளில் அதிக மழையால் சில அணைகள் திறக்கப்படவுள்ளன. இந்த நீா் தாவி நதியில் பாயும் என்பதால் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிந்து நதிநீா் ஆணையா் மூலமே இதுபோன்ற வெள்ள அபாயத் தகவல் பகிரப்படும். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தது. எனினும், மனிதாபிமான அடிப்படையில் நதி வெள்ளம் குறித்து பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் மூலம் வெள்ள முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது.
இமய மலையில் உற்பத்தியாகும் தாவி நதி ஜம்மு பிராந்தியத்தைக் கடந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குள் பாய்ந்து செனாப் நதியுடன் சங்கமிக்கிறது.