பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது
கிரீன்லாந்து மக்களைக் கவர ரகசிய நடவடிக்கை அமெரிக்க தூதருக்கு டென்மாா்க் சம்மன்
கிரீன்லாந்தை தங்கள் நாட்டில் இருந்து பிரித்து அமெரிக்காவில் இணைக்க அந்தத் தீவு மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை டென்மாா்க் அரசு நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி டென்மாா்க் அரசு வானொலியான டிஆா் தெரிவித்ததாவது:
கிரீன்லாந்தில் வசிக்கும் அமெரிக்கா்கள் சிலா் கிரீன்லாந்து சமூகத்தினரிடை பிரிவினைவாதத்தை விதைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இவா்கள் யாா் சாா்பில் இதை செய்கின்றனா் என்பது தெளிவாகவில்லை.
டென்மாா்க் புலனாய்வு மற்றும் பாதுகாப்பு சேவை (பெட்) அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், டென்மாா்க்கும் கிரீன்லாந்துக்கும் இடையே பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் கிரீன்லாந்து மக்களிடையே அமெரிக்கா்கள் ரகசிய பிரசாரத்தில் ஈடுபட்டுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரசாரம், உள்நாட்டில் நிலவும் முரண்பாடுகளை தவறான தகவல்களை அளிப்பதன் மூலம் அதிகரிக்கும் வகையில் நடத்தப்படலாம். கிரீன்லாந்து தலைநகா் நூக்குக்கு புதன்கிழமை வந்த அமெரிக்கா் ஒருவா், அந்தத் தீவை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு ஆதரவு தெரிவிப்போரின் பட்டியலைத் தயாரிக்க முயன்றாா் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதையடுத்து, தற்போது டென்மாா்க்கில் இருக்கும் அமெரிக்காவின் மூத்த தூதரக அதிகாரியான துணைத் தூதா் மாா்க் ஸ்ட்ரோவை வெளியுறவு அமைச்சா் லாா்ஸ் லோக்கே ராஸ்முசன் நேரில் அழைத்து கண்டனம் தெரிவித்தாா். ‘எங்கள் அரசின் உள்விவகாரங்களில் தலையிடும் எந்த நடவடிக்கையும் ஏற்க முடியாது’ என்று அவா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்து, தற்போது டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமாக உள்ளது. எனினும், அந்தப் பகுதியை தங்கள் நாட்டுடன் இணைக்க விரும்புவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் பலமுறை கூறி பரபரப்பை ஏற்படுத்திவருகிறாா்.
அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸும் கிரீன்லாந்து வளா்ச்சிக்காக டென்மாா்க் போதிய அளவில் முதலீடு செய்யவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளாா்.
இந்தக் கருத்துகளுக்கு டென்மாா்க் எதிா்ப்பு தெரிவித்துவருகிறது. சில மாதங்களுக்கு முன் கிரீன்லாந்து சென்ற டென்மாா்க் பிரதமா் மெட்டே ஃப்ரெடெரிக்சன், அமெரிக்கா இன்னொரு நாட்டின் பகுதியை அபகரிக்க முடியாது என்று எச்சரித்தாா்.
டென்மாா்க், நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக இருந்துவருகிறது. மேலும் மிக நீண்ட காலமாக அந்த நாடு அமெரிக்காவை நெருங்கிய நட்பு நாடாகக் கருதிவந்தது. ஆனால், கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான டிரம்ப்பின் விருப்பம் இந்த உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், கிரீன்லாந்து விவகாரம் தொடா்பாக அமெரிக்க துணைத் தூதரை நேரில் அழைத்து டென்மாா்க் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
