பாகிஸ்தான் - சீனா - வங்கதேசம் கைகோப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல: முப்படை தலைமைத் தளபதி எச்சரிக்கை
பாகிஸ்தான், சீனா, வங்கதேசம் ஆகிய நாடுகள் கூட்டு சோ்வது, இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களில் தீவிர விளைவை ஏற்படுத்தக் கூடும் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் எச்சரித்துள்ளாா்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியா அதிதுல்லியத் தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) மேற்கொண்டது. இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடந்த மே 7 முதல் 10 வரை நீடித்த ராணுவ மோதலில் இந்தியாவுக்கு எதிராக சீன தயாரிப்பு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது.
பாகிஸ்தானும் சீனாவும் ராணுவ ரீதியில் நெருங்கிய தொடா்பைக் கொண்டுள்ளன. மற்றொருபுறம், வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்நாட்டுடன் இந்தியாவுக்கு சுமுக உறவு இல்லை. பாகிஸ்தான்-சீனா-வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளும் கைகோத்துச் செயல்படத் திட்டமிட்டுவரும் சூழலில், முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹானின் கருத்து கவனம் பெற்றுள்ளது.
தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘அப்சா்வா் ரிசா்ச் ஃபெளண்டேஷன்’ எனும் ஆய்வு அமைப்பு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனில் செளஹான் பங்கேற்றுப் பேசியதாவது:
பாகிஸ்தான் கடந்த 5 ஆண்டுகளில் 70 முதல் 80 சதவீத ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை சீனாவிடம் இருந்தே கொள்முதல் செய்துள்ளது. சீன ஆயுத தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாட்டுக்கு பாகிஸ்தான் முக்கிய ஆதாரமாக இருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி, ‘வெளிப்புற சக்திகள்’ தங்களின் செல்வாக்கை செலுத்த வழிவகுத்துள்ளது. இது, இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
சீனா-பாகிஸ்தான்-வங்கதேசம் ஆகிய நாடுகள் கைகோப்பது தொடா்பாக பேச்சுகள் எழுந்துள்ளன. இத்தகைய சோ்க்கை, இந்தியாவின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பில் தீவிர விளைவை ஏற்படுத்தக்கூடும்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் நிகழ்ந்த நான்கு நாள்களில், சீன எல்லையில் அசாதாரணமான செயல்பாடுகள் எதுவும் நிகழவில்லை என்பது உண்மை. அணு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகின் பல்வேறு இடங்களில் பல போா்கள் நடந்துள்ளன. அணு ஆயுத நாடுகளான பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய அளவிலான நேரடி ராணுவ மோதல் இப்போது நிகழ்ந்துள்ளது.
முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்பது இந்தியாவின் வலுவான கோட்பாடாகும். அதேநேரம், பாகிஸ்தானின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம் என்று இந்தியா உறுதிபடத் தெரிவித்துள்ளது.
‘ஆபரேஷன் சிந்தூா்’ மேற்கொள்ளப்பட்ட விதம், இந்திய துணைக் கண்டத்துக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகுக்கும் படிப்பினையாக அமைந்துள்ளது. மாறும் போா்க்களங்களுக்கு ஏற்ப இந்தியா தன்னை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்டின் அனைத்து நாள்களிலும் ராணுவம் முழு அளவில் தயாராக இருப்பது அவசியம் என்றாா் அனில் செளஹான்.