பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்
பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினார்.
இந்த நிலையில், தமிழக முதல்வரின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை நேரில் சென்ற வைகோ, அவரிடம் நலம்விசாரித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதிமுக எம்பி துரை வைகோ உடனிருந்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசியதாவது:
”முதல்வர் ஸ்டாலினுக்கு பயப்படக் கூடிய பிரச்னை எதுவும் இல்லை. சிறந்த மருத்துவர்களால் சிகிச்சைப் பெற்று திரும்பியுள்ளார். மருத்துவமனையிலும் அலுவலகப் பணிகளை மேற்கொண்டார்.
ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளியையும் அவரது தந்தையையும் கைது செய்து தமிழக அரசு விரைவான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கூட்டணி அரசு அமையாது. தமிழகமும் அதனை ஏற்றுக்கொள்ளாது. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெறும். திமுக தனிப் பெரும்பான்மை பெறும். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம்.
பெரியார் மற்றும் அண்ணாவின் மண்ணில் ஒருபோதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக போன்ற ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இடமில்லை. அவர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம்.
திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மதிமுக வெளியேறும் என அப்பட்டமாக செய்தி பரப்புகிறார்கள். முதல்வரை ஓபிஎஸ் சந்தித்தது அரசியல் காரணங்களுக்காக இருக்காது என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, வைகோவை சந்தித்த படத்தை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், “என் நலம் விசாரித்து அன்புகொண்டு பேசிய அண்ணன் வைகோவுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.