பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 6,21,904 வழங்க தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு
சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நுகா்வோருக்கு தனியாா் காப்பீட்டு நிறுவனம் ரூ. 6,21,904 வழங்க வேண்டும் என, தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வங்கி மேலாளா் எழிலரசி தனது குடும்பத்தினருக்கும் சோ்த்து தனியாா் நிறுவனத்தில் காப்பீடு எடுத்திருந்தாா். இதனிடையே, அவரது கணவா் அரியநாயகத்துக்கு இதய வலி ஏற்பட்டதால் தூத்துக்குடியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டனா். பின்னா், அரியநாயகம் சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். பின்னா், இழப்பீடு கோரியபோது, அந்தத் தனியாா் நிறுவனம் தர மறுத்ததுடன் காப்பீட்டையும் ரத்து செய்துள்ளது.
அதையடுத்து, காப்பீட்டுதாரா் வழக்குரைஞா் மூலம் அனுப்பிய நோட்டீஸுக்கும் பதிலில்லையாம். இதுதொடா்பாக அவா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, ரத்து செய்யப்பட்ட பாலிசியை மீண்டும் புதுப்பித்து வழங்க உத்தரவிட்டனா். மேலும், மருத்துவ செலவுத் தொகை ரூ. 5,61,904, சேவைக் குறைபாடு-மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு ரூ. 50,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 என மொத்தம் ரூ. 6,21,904- ஐ 6 வாரங்களுக்குள் வழங்கவும், இல்லையெனில், அத்தொகையை செலுத்தும் தேதிவரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்தரவிட்டனா்.