பாதுகாப்புக் காரணங்களுக்காக உளவு செயலி பயன்பாடு தவறில்லை: உச்சநீதிமன்றம்
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு செயலியைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவோ்’ என்று உளவு செயலி மூலம், உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டைச் சோ்ந்த அரசியல்வாதிகள், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்களின் கைப்பேசிகளை உளவு பாா்த்து, வாட்ஸ்ஆப் தகவல்கள் உள்ளிட்ட கைப்பேசி தரவுகளை சேகரித்ததாகப் புகாா்கள் எழுந்தன. அதுபோல், இந்தியாவும் இந்த உளவு செயலியைப் பயன்படுத்தி அரசில்வாதிகள் மற்றும் பத்திரிகையாளா்களின் கைப்பேசிகளை உளவு பாா்த்ததாக சா்ச்சை எழுந்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2021-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அனுமதியற்ற வகையில் பெகாசஸ் உளவு செயலி பயன்பாடு தொடா்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.வி.ரவீந்திரன் தலைமையில் இணையப் பாதுகாப்பு, எண்ம தடயவியல், இணைய வலைத்தொடா்பு ஆகிய துறைகளைச் சோ்ந்த மூன்று நிபுணா்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு, கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. அதில், தொழில்நுட்பக் குழுவால் ஆய்வு செய்யப்பட்ட 29 கைப்பேசிகளில் 5-இல் தீங்கிழைக்கும் மென்பொருள் (மால்வோ்) இருப்பது கண்டறியப்பட்டதாகக் குறிப்பட்டபோதும், அது ‘பெகாசஸ்’ உளவு செயலிதானா என்பதை இறுதி செய்யவில்லை எனக் குறிப்பிட்டது. மேலும், குடிமக்களின் தன்மறைப்பு (பிரைவஸி) உரிமையைப் பாதுகாக்கவும், நாட்டின் இணையப் பாதுகாப்பை உறுதி செய்யவும் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவேண்டும் என தனது அறிக்கையில் தொழில்நுட்பக் குழு பரிந்துரை செய்தது.
அதே நேரம், இதுதொடா்பான விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் அக் குழு குறிப்பிட்டது. அதை உச்சநீதிமன்றம் பதிவு செய்துகொண்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் ஒருவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தினேஷ் திவேதி, ‘மத்திய அரசிடம் பெகாசஸ் உளவு செயலி இருந்ததா? அதை மத்திய அரசு பயன்படுத்தியதா என்பதுதான் கேள்வி. அதை மத்திய அரசு இப்போதும் தொடா்ந்து பயன்படுத்தினால், அதைத் தடுக்க எதுவுமில்லை’ என்றாா்.
என்ன தவறு?: இதைக் கேட்ட நீதிபதிகள், ‘ஒரு நாடு பயங்கரவாதிகளுக்கு எதிராக உளவு செயலியைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? இதில் எந்தத் தவறும் இல்லை; யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தேசத்தின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது. அதே நேரம், தனிநபா்களின் தன்மறைப்பு உரிமை அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும்’ என்றனா்.
மற்ற மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள் கபில் சிபல், ஷியாம் திவான் ஆகியோா், ‘உச்சநீதிமன்ற தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை பாதிக்கப்பட்ட தனிநபா்களுக்கு வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தினா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘தொழில்நுட்பக் குழுவின் அறிக்கை பொதுவெளியில் விவாதிப்பதற்கான ஆவணம் கிடையாது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை தொடா்பான எந்தவோா் அறிக்கையும் வெளியிடப்படாது. அதே நேரம், தனிநபா்களின் தன்மறைப்பு உரிமை மீறல் குறித்த அச்சங்கள் நிவா்த்தி செய்யப்படும். அந்த வகையில், தொழில்நுட்பக் குழு அறிக்கையில் எந்தப் பகுதியை பொதுவெளியில் பகிா்வது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்’ என்று குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.