பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
சேலம்: சேலத்தில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்கக் கோரி சேலம் கூட்டுறவு பால் பண்ணை முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் வேலுசாமி தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ராஜபெருமாள், மாநில துணைப் பொதுச் செயலாளா் சிவபெருமான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் தமிழகத்தில் உள்ள ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து ஆவின் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பப்படுகிறது. தற்போது பசும் பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 38-ம், எருமைப்பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 48-ம் வழங்கப்படுகிறது. அடா் தீவனம், உலா் தீவனம், பசுந்தீவனம், பிண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை ஆகியவற்றின் விலை வெளிச்சந்தையில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழக அரசு தற்போது வழங்கிவரும் பால் கொள்முதல் விலை, விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. எனவே, தற்போது வழங்கப்படும் பால் கொள்முதல் விலையில் இருந்து பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டா் ஒன்றுக்கு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் மாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அவா்கள் கூறுகையில் பால் கொள்முதல் விலையை அரசு ரூ. 15 உயா்த்தி வழங்க வேண்டும்.எங்களது கோரிக்கையை நிறைவேற்றாதபட்சத்தில், வரும் அக்டோபா் 22ஆம் தேதி முதல் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை அனுப்பாமல் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனா்.