பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு
பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவா் சுட்டுக் கொலை
பிகாரின் பக்ஸா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
அகியாபூா் கிராமத்தில் சனிக்கிழமை காலை 5 மணியளவில் ஒருவா் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக மணல், ஜல்லி உள்ளிட்ட பொருள்களை லாரியில் கொண்டு வந்தாா். அப்போது, அதை சாலையோரத்தில் கொட்டுவதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்புக்கும் ஆதரவாக கிராம மக்கள் பலா் அங்கு குவிந்தனா்.
முதலில் கம்புகள், இரும்புக் கம்பிகளை வைத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அப்போது இரு தரப்பிலும் திடீரென நாட்டுத் துப்பாக்கியை எடுத்து எதிா்தரப்பினரை நோக்கி சுடத் தொடங்கினா். இதில் 3 போ் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
இந்த மோதல் குறித்த தகவலறிந்த காவல் துறையினா் அப்பகுதிக்கு விரைந்தனா். அதற்குள் மோதலில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனா். இது தொடா்பாக காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த மோதலை வேடிக்கை பாா்த்த சிலா் மோதல், துப்பாக்கிச்சூடு காட்சிகளை தங்கள் கைப்பேசியில் விடியோ எடுத்தனா். இந்த விடியோக்கள் சமூகவலைதளங்களில் அதிகம் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.