தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுற...
பிரபல ரௌடி அசோக்கைத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்.. செங்கல்பட்டு வனப்பகுதியில் நடந்ததென்ன?
செங்கல்பட்டு அருகே உள்ள திருப்போரூர் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் (30). இவர் ஏ பிளஸ் ரௌடி. சிறையிலிருந்து வெளியில் வந்த அசோக்கை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அசோக் தலைமையிலான ரௌடி டீம், தி.மு.க பிரமுகர் ஒருவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதோடு கஞ்சா விற்பனையிலும் அதிகளவில் ஈடுபட்டு வந்தார். அதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அசோக்கை கைது செய்ய போலீஸார் அவரைத் தேடிவந்தனர். அப்போது அவர் சிங்கபெருமாள் கோயில் அருகே ஆப்பூர் வனப்பகுதியில் தலைமறைவாக இருக்கும் ரகசிய தகவல் தனிப்படை போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அவரைப் பிடிக்க தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர்.

ரௌடி அசோக்கை சுற்றி வளைத்த போலீஸார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸாரை வெட்டிவிட்டு அசோக் தப்பிக்க முயன்றார். அதனால் தனிப்படை போலீஸார் ரௌடி அசோக்கை சரண் அடையும்படி எச்சரித்தனர். ஆனால் அவர் சரண் அடையாமல் போலீஸாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றார். உடனே தனிப்படை போலீஸ் அதிகாரி ஒருவர், தன்னுடைய துப்பாக்கியால் ரௌடி அசோக்கை நோக்கி சுட்டார். இதில் அவரின் இடது காலில் துப்பாக்கி குண்டு துளைத்தது. அதனால் ரத்த வெள்ளத்தில் அசோக் சுருண்டு கீழே விழுந்தார். உடனே அவரை மீட்ட போலீஸார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
யார் இந்த ரௌடி அசோக் என தனிப்படை போலீஸாரிடம் விசாரித்தோம். ``ஏ பிளஸ் ரௌடியான அசோக் மீது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்பட 17 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மேலும் அசோக், நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்.
அதனால் இவரிடமிருந்துதான் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ரௌடிகள், நாட்டு வெடிகுண்டுகளை விலைக்கு வாங்கி வந்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகளோடு பைக்கில் திருப்போரூர் பகுதியில் ரௌடி அசோக் கூட்டாளிகளுடன் சென்றார். அப்போது வேகத்தடையில் ஏறி இறங்கிய பைக்கிலிருந்த நாட்டு வெடிகுண்டுகள் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் ரௌடி அசோக்கின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது.

2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் செங்கல்பட்டில் தினேஷ், பிஸ்கட் மொய்தீன், மாதவன் ஆகியோரை நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்த சம்பவத்தில் ரௌடி அசோக்குக்கு தொடர்பு உள்ளது. இந்தச் சம்பவத்தை தன்னுடைய காதலி மூலம் கச்சிதமாக செய்து முடித்ததாக ரௌடி அசோக் மீது அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த ரௌடி அசோக்கை தற்போது காலில் சுட்டு பிடித்திருக்கிறோம்" என்றனர்.