புதிய இடங்களுக்கு விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை: மத்திய அரசு
மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் புதிய இடங்களுக்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நக்ஸலைட்டுகளின் முயற்சி வெற்றி பெறவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் 2026, மார்ச் 31ஆம் தேதிக்குள் நாடு நக்ஸல் தீவிரவாதத்தில் இருந்து விடுபடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார். இந்நிலையில், நக்ஸல் தீவிரவாதம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் மாநில காவல்துறையின் நக்ஸல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் என்ற மத்திய அரசின் பல்நோக்கு அணுகுமுறை காரணமாக இத்தீவிரவாத வன்முறைச் செயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2013இல் 1,136ஆக இருந்த இத்தீவிரவாத வன்முறைச் செயல்கள் 2023இல் 594ஆகக் குறைந்துள்ளன.
அதேபோல் நக்ஸல் தீவிரவாதத்தால் அப்பாவி மக்களும் பாதுகாப்புப் படையினரும் உயிரிழக்கும் சம்பவங்களும் குறைந்துள்ளன. 2013இல் 397ஆக இருந்த இந்த உயிரிழப்புகள் 2023இல் 138ஆகக் குறைந்துள்ளன.
நக்ஸல் தீவிரவாதச் செயல்கள் நடைபெறும் நிலப்பரப்பின் அளவும் சுருங்கியுள்ளது. கடந்த 2013இல் 76 மாவட்டங்களில் உள்ள 328 காவல் நிலைய சரகப் பகுதிகளில் நிகழ்ந்த நக்ஸல் தீவிரவாதச் செயல்கள் 2023இல் 42 மாவட்டங்களில் உள்ள 171 காவல் நிலைய சரகப் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்தன.
நக்ஸலைட் அமைப்புகளிலேயே சிபிஐ (மாவோயிஸ்ட்) அமைப்புதான் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அவர்கள் தங்களது ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தங்களது காலாவதியான சித்தாந்தத்தைப் பரப்ப முயற்சிக்கின்றனர். இதன் விளைவாக அந்தப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு மாநிலங்கள் எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவும் மத்திய அரசு மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் காரணமாகவும் நக்ஸலைட் அமைப்புகளில் இருந்த உறுப்பினர்கள் பலரும் வன்முறைப் பாதையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைந்தனர்.
மாநிலங்களுக்கு இடையிலான பகுதிகளில் புதிய இடங்களுக்கு தங்கள் நடவடிக்கைகளை விரிவுபடுத்த நக்ஸலைட்டுகள் முயற்சி செய்தனர். எனினும் அந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினருக்கு அதிக அளவிலான உயிரிழப்புகளை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள்தான் ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை எதிர்கொள்வதற்கான திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.