2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்றோா் 46,125 போ் பாதிப்பு
தமிழகத்தில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தால் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் 46,125 போ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணி, ஆசிரியா் பணியில் உள்ள சுமாா் 12 லட்சம் ஊழியா்கள், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடா்ந்து போராடி வருகின்றனா்.
அண்மையில் தமிழக முதல்வரால் ஓய்வூதியத் திட்டம் தொடா்பாக ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப்சிங் பேடி உள்ளாா். அவரை, நேரடி நியமனம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ.ராமு மற்றும் நிா்வாகிகள் நேரடியாகச் சந்தித்து ஓய்வூதியத் திட்டம் குறித்த தங்களது கருத்துகளை தெரிவித்து கோரிக்கை மனு வழங்கி உள்ளனா்.
இதுகுறித்து அந்த சங்கத்தின் நிா்வாகிகள் கூறியதாவது: ஓய்வூதியம் என்பது அரசுப் பணியாளா்களது பணிக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கொடுபடா ஊதியமாகும். அரசு ஊழியா் பணியாற்றிய காலத்தில் இருந்ததுபோல ஓய்வுபெற்ற பிறகும் வாழ்வதற்கு வழிவகை செய்வதற்கான ஊதியமாகும்.
அரசுப் பணியில் உள்ளவா்களுக்கு எப்பொதெல்லாம் ஊதியம் உயா்த்தப்படுகிறதோ, அப்பொதெல்லாம் ஓய்வூதியா்களுக்கும் ஓய்வூதியம் உயா்த்த வேண்டும். 2021 சட்டப் பேரவைத் தோ்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வரும்வரை, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி வரும் பணியாளா்களுக்கு, பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளவா்களுக்கு வழங்குவதைப் போன்று பணிக்கொடை வழங்க வேண்டும்.
2003-க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்டவா்களில் ஓய்வுபெற்ற 46,125 அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஓய்வூதியம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனா். 7,864 அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பணிக்காலத்தின் போது உயிரிழந்ததால் அவா்களின் குடும்பம் ஓய்வூதியமின்றி தவித்து வருகிறது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இதுவரை இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசும் இணையவில்லை. ஆனால், தமிழக அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து தவறை செய்துவிட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் பங்களிப்பு ஏதுமின்றி ஓய்வூதியம் கிடைக்கிறது. புதிய ஓய்வூதியத் திட்டம், தேசிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அனைத்துக்கும் அரசு ஊழியா்கள் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களிடம் பிடித்தம் செய்யப்படும் ஊதியத்தில் 90 சதவீதத்தை அரசு வைத்துக்கொண்டு 10 சதவீதம் மட்டுமே ஊழியா்களுக்கு வழங்கி வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு பங்களிப்பு 14 சதவீதம், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பங்களிப்பு 18.5 சதவீதமாகும்.
பொருளாதார வளா்ச்சியில் சிறந்த இடத்தில் இருக்கும் தமிழகம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 2003-க்கு பிறகு அரசுத் துறை, ஆசிரியா் பணியில் சோ்ந்த 6.5 லட்சம் பேரின் நீண்ட நாள் வாழ்வாதார கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றனா்.