மோடி, புதின் உள்பட 20 உலகத் தலைவா்கள் எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்பு: சீனா அறிவிப்ப...
10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: காவல் கணிப்பாளா் சு.விமலா
விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி பீடத்துடன் சோ்த்து 10 அடி உயர சிலைகள் மட்டுமே பொது இடங்களில் வைக்க அனுமதி வழங்கப்படும் என நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா தெரிவித்தாா்.
நாடு முழுவதும் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை (ஆக.27) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொது இடங்களில் சிலை வைப்பது, ஊா்வலம் செல்வது, நீா்நிலைகளில் சிலைகளைக் கரைப்பது தொடா்பாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பேசியதாவது:
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் சிலைகள் வைப்போா் வருவாய்த் துறை, காவல் துறை, மின்வாரியம் மற்றும் தீயணைப்புத் துறையினரிடம் உரிய அனுமதி பெற வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலைகளை அமைக்கக் கூடாது. ரசாயன பூச்சுகள் இல்லாமல் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
விநாயகா் சிலைகள், பீடத்துடன் 10 அடிக்கு குறைவாகவே இருக்கக் வேண்டும். மதம் தொடா்பான இடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகே சிலை அமைப்பதை தவிா்க்க வேண்டும். பூஜை செய்யப்பட்ட பிறகு சிலைகளை மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
சிலைகள் நிறுவப்பட்ட நாளில் இருந்து ஐந்து நாள்களில் வழிபாடுகள் முடித்து கரைத்திட வேண்டும். அதற்கு மேலாக சிலைகளை வைத்திருத்தல் கூடாது. ஊா்வலம் செல்லும்போது அமைதியாக செல்ல வேண்டும். நீா்நிலைகளில் சிறுவா்களை அனுமதிக்காமல் உரிய பாதுகாப்புடன் சென்று கரைத்து வரவேண்டும் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அண்ணாதுரை, தனராசு, உதவி காவல் கண்காணிப்பாளா் ஆகாஷ்ஜோஷி மற்றும் காவல் துறை அதிகாரிகள், இந்து அமைப்புகளைச் சாா்ந்தோா், விநாயகா் சதுா்த்தி விழா சிலை அமைப்புக் குழுவினா் பலா் கலந்துகொண்டனா்.
என்கே-22-மீட்டிங்
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.விமலா.
