புதுச்சேரியில் போலி மதுபான ஆலை: போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
புதுச்சேரி அருகே போலி மதுபான ஆலை செயல்பட்ட சம்பவம் அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறையினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக புதுவை மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கூறினாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் போலி ஆலையில் தயாரிக்கப்பட்ட மதுப்புட்டிகள் தமிழகத்துக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தயாரிக்கப்படும் போலி மதுபானங்கள் தமிழகத்துக்கு கடத்தில் சென்று விற்பதற்கு திமுகவினா் உடைந்தையாக செயல்பட்டு லாபமடைகின்றனா்.
அண்மையில் புதுச்சேரி அருகே சுமாா் ரூ.50 லட்சம் மதிப்புள்ள போலி மதுபானம் உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்த போலி மதுபான உற்பத்தியான இடம் புதுவை மாநில அமைச்சரின் மகளுக்கு சொந்தமானதாகக் கூறப்படுகிறது. அந்த அமைச்சா் மீது தொடா்ந்து இதுபோன்ற விமா்சனங்கள் வருவது புதுவை அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு முதல்வா் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
புதுச்சேரிக்குள் போலி மதுபான ஆலை செயல்பட்ட சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினா் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.