புதுவைக்கு மாநில அந்தஸ்து: காரைக்கால் எம்.எல்.ஏ.க்கள் கையொப்பமிட்டு ஆதரவு
காரைக்கால்: புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரும் இயக்கத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை கையொப்பமிட்டு ஆதரவு தெரிவித்தனா்.
புதுவைக்கு மாநில தகுதி கோரும் பொதுமக்கள் கையொப்பமிட்ட கோப்புகளை குடியரசுத் தலைவா், பிரதமா், உள்துறை அமைச்சரிடம் கொடுப்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கத்தின் சாா்பில், காரைக்கால் மக்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு, இணை ஒருங்கிணைப்பாளா் பொன். பன்னீா்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளா்கள் ந.ப. குமணன், ஜெ.சூா்யா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க பொறுப்பாளா் வே.கு.நிலவழகன் ஆகியோா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் மற்றும் நிரவி - திருப்பட்டினம் தொகுதி பேரவை உறுப்பினா் எம்.நாக தியாகராஜன் ஆகியோரிடம் திங்கள்கிழமை கையொப்பம் பெற்றனா். பேரவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்களும் கோரிக்கையை ஆதரித்து கையொப்பமிட்டனா்.