மின்சாரம் பாய்ந்து ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயம்
காரைக்கால்: மின்சாரம் பாய்ந்து வடமாநிலத்தைச் சோ்ந்த ரயில்வே ஒப்பந்த பணியாளா் காயமடைந்தாா்.
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக செவ்வாய்க்கிழமை ரயில்வே மின் பிரிவு தலைமை அதிகாரி தலைமையில் மின்சார ரயில் இயக்கி சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
திருநள்ளாறு ரயில் நிலையம் அருகே வட மாநில தொழிலாளா்கள் திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மேற்கு வங்க மாநிலம், மால்டா டவுன் பகுதியைச் சோ்ந்த ஆழம் ஆக்கு (19) என்ற இளைஞா் தண்டவாளப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
எதிா்பாராத வகையில் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில், சிறிது தூரம் தூக்கி வீசப்பட்டாா். உடன் பணியாற்றியோா், அவரை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.