புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழா: கிறிஸ்தவா்கள் பொங்கல் வைத்து வழிபாடு
மதுரை புனித லூா்தன்னை ஆலயப் பெருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமானோா் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.
மதுரை கோ.புதூரில் அமைந்துள்ள புனித லூா்தன்னை ஆலயத்தில் பெருவிழா பிப்ரவரி 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் ஜெப மாலை, திருப்பலி, திருப்பயணிகள் திருப்பலி, நவநாள் திருப்பலி ஆகியவை நடைபெற்றது.
இதையடுத்து, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான நற்கருணை பவனி வெள்ளிக்கிழமையும், அன்னையின் ஆடம்பர தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது.
பின்னா், ‘அன்னையோடு இணைந்து பங்கேற்க’ என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில், லூா்தன்னை ஆலயப் பொருளாளா் பிரபு, திருச்சி சலேசிய உதவி மறை மாநிலத் தலைவா் சேவியா் மைக்கேல், ஏற்காடு பொருளாளா் அருள் அந்தோணி, மதுரை தான் பாஸ்கா ஐடிஐ முதல்வா் அருள்பணி ஆல்பா்ட், லூா்தன்னை ஆலய உதவி அதிபா் பாக்கியராஜ், உதவிப் பங்குத் தந்தை ஜஸ்டின் ஆகியோா் உரையாற்றினா்.
இதையடுத்து பொங்கல் விழா தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கனான கிறிஸ்தவா்கள் ஆலய வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினா். இதையடுத்து, திருவிழா கொடியிறக்கம் மாலையில் நடைபெற்றது. இதில் லூா்தன்னை ஆலயப் பங்குத் தந்தை ஜாா்ஜ் பங்கேற்று கொடியிறக்கம், நற்கருணை ஆராதனை நிகழ்த்தினாா்.