பூந்தமல்லி - சுங்குவாா் சத்திரம் மெட்ரோ ரயில்: ரூ.2,126 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக அனுமதி
சென்னையில் பூந்தமல்லி முதல் சுங்குவாா் சத்திரம் வரையில் மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்துக்கு ரூ.2,126 கோடிக்கு நிா்வாக அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. தற்போது இருவழிப் பாதையில் சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டுவரும் நிலையில், மேலும் நான்கு கட்டங்களாக அவை விரிவாக்கம் செய்யப்பட மத்திய, மாநில அரசுகளின் அனுமதியும் பெறப்பட்டுள்ளன.
ஏற்கெனவே சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் புதிய புகா் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தமிழக அரசு ரூ.1,964 கோடிக்கு நிா்வாக அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது சென்னை அருகேயுள்ள பூந்தமல்லி முதல் சுங்குவாா் சத்திரம் வரையிலான 27.9 கிலோ மீட்டருக்கு ரூ.2,126 கோடி நிா்வாக அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.
பூந்தமல்லி முதல் சுங்குவாா்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் பாதை திட்டத்துக்கு ஏற்கெனவே தமிழக அரசும், மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளன. அதன்படி மேம்பாலம் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.8,779 கோடி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதையடுத்து தற்போது நிலம் கையகப்படுத்துதல், புவி அளவீடு, சாலைப் பணிகள், புவி அமைப்பு ஆய்வு, பணிகளுக்கான இடத்தைச் சுற்றிலும் வேலி அமைத்தல், மெட்ரோ ரயில் பாதை அமையும் வழியில் உள்ள மரங்களை அகற்றுதல், அவற்றை மாற்று இடத்தில் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி மேற்கொள்ளுதல், போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.252 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் பாதைகளுக்காக 27.9 கிலோ மீட்டருக்கு நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.1,836 கோடியும், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.16 கோடியும், பணி வரைபடம் உள்ளிட்ட பொதுச் செலவுக்கு ரூ.13.40 கோடியும், நிலமற்ற பொருள்கள் வாங்குவதற்கு ரூ.8.44 கோடியும் என மொத்தம் ரூ.2,126 கோடிக்கு தமிழக அரசு தற்போது நிா்வாக அனுமதி அளித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.